செவ்வாய், டிசம்பர் 14, 2010

கோவை




                  மூலிகைகள் எல்லாம் மலைகளில்தான் கிடைக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் அருகே காணப்படும் புல், பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மூலிகைகள்தான். 

இவை அனைத்தும் நமக்கு பயன்படும் வகையில் அவற்றின் மருத்துவக் குணங்களை கண்டறிந்து சொன்னவர்கள்தான் சித்தர்களும், ரிஷிகளும். இந்த மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளிலேயே நின்றுவிட்டன. 

அவை அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் கோவையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்களை சாப்பிட பறவையினங்கள் பறந்தோடிவரும். 

இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர்.

இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர். மேலும் அப்பைக் கோவை, ராமக் கோவை என இருவகைகள் உள்ளன. 

Tamil - Kovai

English - Ivy gourd

Telugu - Donda keya

Malayalam - Kovvai

Sanskrit - Bimbi

Botanical Name - Coccinia grandis

கண்ணுங் குளிர்ச்சிபெறுங் காசமொடு வாயுவறும்

புண்ணுஞ் சிரங்கும் புரண்டேகும்-நண்ணுடலும்

மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேருங்

கோதிலாக் கோவையிலைக்கு

(அகத்தியர் குணபாடம்)

கண் நோய் குணமாக

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. 

இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.

கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

இரத்தம் சுத்தமடைய

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. 

இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

உடல் சூடு சமநிலையிலிருக்க

தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குரு ஏற்படாமல் தடுக்க.

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறுவது திண்ணம்

கருத்துகள் இல்லை: