வியாழன், நவம்பர் 25, 2010

முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.


தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது.

அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது

சக்கரை நோய்க்கு கை வைத்தியம்

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான். 

எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். 

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும். 

இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்

இரும்புச் சத்து

1. இரும்புச் சத்தானது பெரும்பான்மை பழங்களிலும், கீரைகளிலும் அசைவ உணவு வகைகளிலும் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் B12, Folic acid போன்ற சத்துக்கள் தேவைபடுகின்றன. எனவே, இவைகளும் கிட்டும் வகையில் உணவை அமைத்துக் கொள்ளவேண்டும்.

2. அரிசி கோதுமை வகைகளை நன்கு பாலிஷ் செய்து உண்பதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அரசியில் மீதியிருக்கும் சத்து கிடைக்காமல் போகும். இதற்கு பதிலாக அடிக்கடி கைக்குத்தல் அரிசி, அவல் ஆகியவற்றை கஞ்சி, பாயாசம் போல செய்து பருகலாம். இதனால் இதன் இரும்பு மற்றும் வைட்டமின் சத்து கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, கார் அரிசி ஆகியவையும் இதில் சிறந்தன.

3. வாரம் 3 நாட்கள் கண்டிப்பாக கீரைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக முருங்கைக் கீரை, பசளை, வெந்தய கீரைகளில் இரும்புச் சத்து அதிகம். இவைகளை பகலுணவில் கைப்பிடி அளவு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மேலும் இவற்றின் நார்ச்சத்தினால் மலம் சிக்கலின்றி கழியும்.

4. கருவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. எனவே, இவற்றை துவையலாக அரைத்தும், மோரில் கலந்தும் பருகலாம். இதனால் நல்ல செரிமானம் கிட்டும்.

5. மாதத்தில் 2 நாட்களாவது காயகல்ப கீரைகளாகிய பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை ஆகியவற்றை உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். (அ) இந்தக் கீரைகளை மண்தொட்டிகளில் வளர்த்து தினமும் 1-2 இலையை காலை வெறும் வயிற்றில் உண்டுவரலாம்.

6. பழவகைகளில் மாதுளை, திராட்சை, சப்போட்டா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், விளாம்பழம் ஆகியவற்றில் இரும்புச் சத்தும், பல்வேறு வைட்டமின்களும் உள்ளன. எனவே, மாலை நேரங்களில் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணலாம். பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

7. உலர்ந்த பழவகைகளான சீமை அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கர்ஜுர்க்காய் ஆகியவற்றிலும், உலர்ந்த கொட்டைகளாகிய முந்திரி, பாதாம், அக்ரோட்டு ஆகியவற்றில் இரும்புச் சத்துடன் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைகளை இரவு தூங்கச் செல்லும் முன் உண்ணலாம். 

8. அசைவ உணவுகளில் இரும்புச் சத்து அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பாக ஆட்டு ஈரல், எலும்பு மஜ்ஜை மிகவும் சிறந்தன. வெள்ளாட்டின் நெஞ்செலும்பை 'சூப்' போல செய்து பருகினால் நோயினால் மெலிந்த உடலும் கூட தேறிவிடும். தவிர ஆட்டுக்கால், மாமிசம், மீன் ஆகியவற்றை அவரவர் தேக நிலை, வயது, காலத்திற்கேற்ப உண்டு வர 'சோகை நோய்' ஏற்படாது. ஆங்கிலத்தில் சொல்வது போல எப்போதும் 'in the pink of health'இல் இருக்கலாம்

அப்படி என்ன இருக்கிறது மஞ்சளிலே?

பிணிக்கு மருத்துவமணை எதற்கு? சமயலறை இருக்கவே இருக்கு !!

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? 

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? தொண்டைப் புண்ணுக்கு, நகச்சுற்றுக்கு, மூக்கடைப்பு, இரத்தக் கட்டு, கபத்துக்கும், வாதத்துக்கும், புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு,

குடல் பிணிகள், பூச்சித் தொல்லை, கண் உஷ்ணத்தினால் எரிச்சல், புற்றுநோய் வராமல் தடுக்கும்

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சொல்லுகிறேன் கேட்டுக்கங்க. 

கபத்துக்கும், வாதத்துக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லதுங்க.
பையன் விளையாடும்போது அடிபட்டுட்டான். இரத்தக் கட்டு வேற. என்ன செய்யலாம்? மஞ்சளை அரைத்துப் போடுங்க. இரண்டு அல்லது மூன்று முறை போட்டதுமே குணம் தெரியுமே? 

புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, மஞ்சளோட கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து, நீர்விட்டு மைபோல் குழைய அரைத்துப் போட்டுவர விரைவில் ஆறிவிடும். 

பழுத்தும் உடையாத வேனில் கட்டியை உடையவைக்க மஞ்சளையும், கார சோப்பையும் (துணிக்குப் போடும் சோப்பு) இழைத்துப் போட்டால் உடைந்து விடும்.

குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு மஞ்சள் கைகண்ட மருந்து. வெந்நீரில் சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் கலந்து பருகக் கொடுத்தால் இருமல் நின்றுவிடும். 

மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் சரியாகி விடும். 

விரளி மஞ்சள் தூளை நல்ல எண்ணெயில் இட்டுக் காய்ச்சவும். இதைத் தேய்த்துக் குளித்தால், மூக்கில் நீர்வடிவது நின்று விடும்.

வயிற்றில் இருக்கும் கிருமிகளைப் போக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. பச்சை மஞ்சளை அரைத்து சில நாட்கள் வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வந்தால் குடல் பிணிகள் தீரும். பூச்சித் தொல்லை நீங்கும்.

தொண்டைப் புண்ணுக்கு மஞ்சள் தூளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் குணமாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? 

கவலைப் படாதீங்க, காய்ந்த மஞ்சள், வெல்லம் இரண்டையும் சமமா எடுத்துக்குங்க. அரிசி களைந்த நீர்விட்டு அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால், சீறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும்.

நகச்சுற்றுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சிறிது மஞ்சள்பொடி, சுண்ணாம்பு இரண்டையும் குழைத்துப் போட்டு வந்தால் விரைவில் குணம் தெரியுமே. 

கண் உஷ்ணத்தினால் எரிச்சல் உண்டாகி அவதிப்பட்டால் மஞ்சள் கஷாயம் போட்டு, ஆறிய பின் அதனால் கண்களைக் கழுவி வர வேண்டும். 

மஞ்சள் நீரில் நனைத்த துணியால் கண்களை ஒற்றி எடுத்தாலும் நல்லது. உஷ்ணம் மற்றும் கண் சிவப்பும் கூட மாறி குணமாகி விடும்.

மஞ்சள், மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த விழுதை மோரில் கலக்கி இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலங்களில் வரும் வயிற்று உபாதை, தலைவலி எல்லாம் காணாமற் போய் விடும்.

சமையலில் மஞ்சள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. 

புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டென்றால், இதன் மகிமை சொல்லவும் இயலுமோ?

அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டுடன், வீக்கமாய் இருப்பின், அரிசிமாவு, மஞ்சள், விளக்கெண்ணெய் கலந்து இரும்புக் கரண்டியிலிட்டுக் கிண்டினால் திரண்டு வரும். சூட்டுடனே, மெல்லிய துணியில் அதனை வைத்து, முடிச்சிட்டு, ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறைந்து, இரத்தக் கட்டும் குறைந்து விடும். வலிக்கு இதமாக இருக்கும்.

இருமல் தொடர்ந்து தொல்லை செய்கிறதா? கவலை வேண்டாம். மஞ்சள் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணம் ஆகிவிடும்.
தோல்நோய்கள் அண்டாது.

இப்போது ஒரு அழகுசாதனக் குறிப்பு சொல்லட்டுமா?
மஞ்சள், வேப்பம்பூ, வெள்ளரிக்காய் மூன் றையும் அரைத்து உட லில் பூசிக் குளித்து வந்தால் நாளடைவில் சருமம் நல்லநிறம் பெறும். 

அதுமட்டுமின்றி இரவு தூங்கப் போவதற்கு முன்னால் காய்ச்சிய பசும்பாலில், தேன், மஞ்சள் பொடி, சிறிது குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடம்பும், முகமும் பளபள என்றாகி விடுமே!

அட எங்கே போறீங்க? சமையலறையில் மஞ்சள் இருக்கான்னு பார்க்கக் கிளம்பிட்டீங்களா?

தனியா தனியான்னு ஒரு சாமான். அட அதுதாங்க கொத்துமல்லி விதை. அது இல்லாம சமையலா? சரிதான் சமையலுக்கு மட்டுமா அது பயன்படுது? இதோ இப்ப பார்க்கலாமா அது இன்னும் எதுக்கெல்லாம் பயன்படுதுங்கிறத?

காலைல படுக்கைய விட்டு எழுந்ததும் இலேசாய்த் தலை சுத்துது. நெற்றிப்பொட்டு இரண்டும் விண் விண்ணுனு தெறிக்குது. பித்தமா இருக்குமோ? வாந்தி வேற வரமாதிரி இருக்கா? 

கவலையே படாதீங்க! ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, சிறு இஞ்சித் துண்டு, கிஸ்மிஸ் (அதுதாங்க உலர்ந்த திராட்சை) பழம் ஐந்து எல்லாத்தையும் அம்மியில வெந்நீர் விட்டு அரைக்கணும். பிறகு வடிகட்டி, தேன் கலந்து அரை டம்ளர் குடிங்க. புத்துணர்ச்சியோட வேலைகளைப் பார்க்கத் துவங்குவீங்களே. இதை `மல்லி சொரஸம்' அப்படீன்னு சொல்வாங்க. இது அந்தக் காலத்துல பெரியவங்க கையாண்ட முறை.

உஷ்ணத்தால் சில பேருக்கு பேதியாகும். கடுப்பா இருக்கும். ஏன் எரிச்சல் கூட ஏற்படும். இதுக்கு மருந்து இதோ. தனியாவைச் சிறிது எடுத்து வாணலியில் வறுத்து தூள் செய்துக்கணும். அதோட சமஅளவு சர்க்கரை கலந்து 1 ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் நீர் சேர்த்து சாப்பிடவும். 

இப்படி 3 வேளை சாப்பிட்டா பேதியும் குணமாகும். வயிற்றுவலி, எரிச்சல் எல்லாம் நீங்கி விடும்.

சுக்கு மல்லி காபி. இப்பவெல்லாம் இது ரொம்பப் பேசப்படற ஒரு பானம். சுக்கைப் பொடி செய்துக்கவேணும். 

தனியாவை லேசா வறுத்துப் பொடி செய்து சமஅளவு இரண்டையும் கலந்து, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பொடியோட ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைங்க. பிறகு இறக்கி வடிகட்டி பால் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிச்சா, ஆஹா என்ன சுவை! உடம்பிற்கும் ரொம்ப நல்லது. தாகம், நாவறட்சி தீரும். உடம்பு சூட்டுக்கு, அதாவது உஷ்ண உடல்வாகு கொண்டவங்க, வெறும் தனியா கஷாயம், பால், சிறிது சீனி சேர்த்து அருந்தலாம்

வாழையில் இவ்ளோ இருக்கா?


வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது.விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.

இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.


மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால்இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும்





முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது.


நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள்இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.


நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.


விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான்.

சத்துக்கள்: எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது.


இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.


மருத்துவக் குணங்கள் : வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.


வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.


நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது.நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.


பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.


நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.


வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.


வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.


ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.


வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.


வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையானஎல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :


நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால்ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம்.

குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.

கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.


பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள்.மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால்அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தைஉண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.

ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.

செவ்வாழை பலமளிக்கும்.

மொந்தன் காமாலைக்கு நல்லது.

பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.

நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.


காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலைஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம்சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் ஒதுக்கி தவிர்த்து விட வேண்டும்.

சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம்.

இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல்முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.

மலச்சிக்கல் (Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.


புகைப்பிடிப்பது (Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிம்

ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது.

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல்நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும்.

மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது.

மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

மூளைக்கு வலுவூட்டும்.

தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும்பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்குமுதலியவை நீங்கும்.
இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.

சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்.

உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.


உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும்உண்டாகும்.

தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

மலத்தை இளக்கி, சூட்டை தணிப்ப தோடு, மிளகளவு பெருங்காயத்தை வாழைப் பழத்துடன் விழுங்கினால் உடம்பில் சிரங்கு நமச்சல் தீரும்.

வாழைப்பழத்தோல்:”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால்ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.


இதன் குருத்தைத் தீப்புண்ணில் வைத்து கட்டினால், புண் விரைவில் ஆறுவதோடு


வாழைக் குருத்தை சாப்பிட்டால் கூந்தல் நரைக்காமல்முகம் பளபளப்பாக இருக்கும்.

வாழை இலை:சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வர நல்ல குணம் கிடைக்கும்.

காயங்கள் மற்றும் தோல் புண்களுக்கு, தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணியில் நனைத்து புண்கள்மேல் போட்டு, இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும். இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்ஆகியவற்றுக்கு குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் அது சரியாகும்.

சின்னம்மை, படுக்கைப் புண், தீக்காயம் ஆகியவற்றுக்கு பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் அந்த நோய் பாதிப்பு குணமாகும்.

வாழை வேர்:குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை ஆகியவற்றுக்கு வாழை வேரை தீயிலிட்டு சாம்பலாக்கி, அந்த சாம்பலில் கால் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர அந்த பாதிப்புகள் குணமாகும்.

வாழைப்பிஞ்சு: இது அதிமூத்திரம், இரத்த மூலம் அடிவயிற்று ரணம் தீர்வ தோடு வாழைக்காய் சாப்பிடுவதால் இரத்தம் விருத்தியாகி, வறட்டு இருமல், பித்த வாந்தி, வாயில் நீர் ஊறுதல் போன்றவை நீங்கிபசியை அதிகரிக்கும்.

அதேபோல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


வாழைக்காய் : பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது.

வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.

வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.

மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது.

அதனால், இதை சமையலில் குறிப்பிட்ட அளவு எடுத்து வரலாம். ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக்காய்க்கு நிகர் வேறு எதுவும் கிடையாது.

அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாய்வுத் தொல்லை உண்டாகும்.

வாழைத்தண்டு : சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள் மற்றும் ரத்தக் குறைபாடுகளுக்கு வாழைத்தண்டு சிறந்தது.


அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சிறு நீரகக் கற்கள் கரைவதோடு சிறுநீரகங்களும் பாதுகாக்கப்படுகிறது.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டுசாறு : இது வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள்ஆகியவற்றை போக்குகிறது.

உடம்புக்குள்ளே "கல்லு" வந்திச்சா?

ஆரம்ப நிலை என்றால் மிகுந்த தண்ணீர், இளநீர், குளுக்கோஸ் முதலிய பானங் களோடு வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம், கொள்ளுப் பயறு சூப் அல்லது ரசம் நல்ல பலனளிக்கும்.

வாழைப்பூ: இதை சமைத்து சாப்பிட்டால் பித்தம், ஆசனக்கடுப்பு, வெள்ளை படுதல், இவற்றை நீக்கும்.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைப் பட்டை: இயற்கை யான குளிர்சாதனமாக அமைத்து, அவற்றால் ஆன பெட்டிகளில் பல அபூர்வ மூலிகைகள் பாதுகாக்கப்படுவதோடு தீக்காயங்களுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

தொகுத்தது: வாஞ்ஜூர்.
******************