வியாழன், நவம்பர் 25, 2010

இரும்புச் சத்து

1. இரும்புச் சத்தானது பெரும்பான்மை பழங்களிலும், கீரைகளிலும் அசைவ உணவு வகைகளிலும் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் B12, Folic acid போன்ற சத்துக்கள் தேவைபடுகின்றன. எனவே, இவைகளும் கிட்டும் வகையில் உணவை அமைத்துக் கொள்ளவேண்டும்.

2. அரிசி கோதுமை வகைகளை நன்கு பாலிஷ் செய்து உண்பதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அரசியில் மீதியிருக்கும் சத்து கிடைக்காமல் போகும். இதற்கு பதிலாக அடிக்கடி கைக்குத்தல் அரிசி, அவல் ஆகியவற்றை கஞ்சி, பாயாசம் போல செய்து பருகலாம். இதனால் இதன் இரும்பு மற்றும் வைட்டமின் சத்து கிடைக்கும். கோதுமை, கேழ்வரகு, கார் அரிசி ஆகியவையும் இதில் சிறந்தன.

3. வாரம் 3 நாட்கள் கண்டிப்பாக கீரைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக முருங்கைக் கீரை, பசளை, வெந்தய கீரைகளில் இரும்புச் சத்து அதிகம். இவைகளை பகலுணவில் கைப்பிடி அளவு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மேலும் இவற்றின் நார்ச்சத்தினால் மலம் சிக்கலின்றி கழியும்.

4. கருவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. எனவே, இவற்றை துவையலாக அரைத்தும், மோரில் கலந்தும் பருகலாம். இதனால் நல்ல செரிமானம் கிட்டும்.

5. மாதத்தில் 2 நாட்களாவது காயகல்ப கீரைகளாகிய பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை ஆகியவற்றை உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். (அ) இந்தக் கீரைகளை மண்தொட்டிகளில் வளர்த்து தினமும் 1-2 இலையை காலை வெறும் வயிற்றில் உண்டுவரலாம்.

6. பழவகைகளில் மாதுளை, திராட்சை, சப்போட்டா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், விளாம்பழம் ஆகியவற்றில் இரும்புச் சத்தும், பல்வேறு வைட்டமின்களும் உள்ளன. எனவே, மாலை நேரங்களில் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணலாம். பழங்களை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

7. உலர்ந்த பழவகைகளான சீமை அத்திப்பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கர்ஜுர்க்காய் ஆகியவற்றிலும், உலர்ந்த கொட்டைகளாகிய முந்திரி, பாதாம், அக்ரோட்டு ஆகியவற்றில் இரும்புச் சத்துடன் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைகளை இரவு தூங்கச் செல்லும் முன் உண்ணலாம். 

8. அசைவ உணவுகளில் இரும்புச் சத்து அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பாக ஆட்டு ஈரல், எலும்பு மஜ்ஜை மிகவும் சிறந்தன. வெள்ளாட்டின் நெஞ்செலும்பை 'சூப்' போல செய்து பருகினால் நோயினால் மெலிந்த உடலும் கூட தேறிவிடும். தவிர ஆட்டுக்கால், மாமிசம், மீன் ஆகியவற்றை அவரவர் தேக நிலை, வயது, காலத்திற்கேற்ப உண்டு வர 'சோகை நோய்' ஏற்படாது. ஆங்கிலத்தில் சொல்வது போல எப்போதும் 'in the pink of health'இல் இருக்கலாம்

கருத்துகள் இல்லை: